சிந்தனை சிதறல்கள்
ஏமாற்றம்
தண்ணீரின்றி கண்ணீரில்
தவமிருக்கிறது குளத்தங்கரை
கொக்கு.....!
சிந்தனை
வெள்ளமாய் ஓடும் என்
எண்ணங்களை.....
அள்ள முடியவில்லை
கிள்ளததான் முடிகிறது..!
விந்தையானவள்
எந்தை அறிவரோ ! இல்லை நுந்தை தான் அறிவாரோ....
விந்தையான உன்னை என் சிந்தையில் வைத்திருப்பதை..!!
கம்பளி பூச்சி
காதலெனும கூட்டினில்
என்னை சிறைவைத்தேன்
கனவெனும் காட்டினுள்
நான் கம்பளி பூச்சி...!!
பெரியவள்
காயம் மூன்றெழுத்து
அவளுக்கோ இரண்டெழுத்து
ஏனோ அவள் தான்
பெரியவள்..........
என் செய்வேன்
இதயம் அடையும் காயங்களுக்கு
இரவின் மடியே வழி.....
இரவும் வலியாகி போனால்
என் செய்வேன்.........!!
கீறல்கள்
உடைப்பட்ட மனதானது மீண்டும்
ஓட்டபட்டாலும்.........!
ஒட்டப்பட்ட முட்டை ஓட்டிற்கு
ஒப்பாகும்.........!!
கீறல்களே காயங்களாகி நிற்கும்.
மனது
நெருப்பின்றி பற்றி கொள்கிறது
ஒலை குடிசயாய் எந்தன் மனது..!!
தாய்மை
தாயாகிய மகிழ்ச்சியில்
தன்னையே மறக்குது
இரைதேடும் சிட்டுக்குருவி..!!
விந்தை
வயக்காட்டு மாளிகையில்
வைகுண்டத்து மங்கையர்
மின்மினி பூச்சிகளாய்.....!!
ஆனந்தம்
அழுகிய பழம்
ஆனந்தம் கொள்கிறது
ஈக்களுக்கு உணவாகையில்....!!
விவசாயி
வெட்டு பட்ட பூமாதேவி சிரிக்கின்றாள் ....
விளை நிலத்தில் விவசாயி..!!
ஏக்கம்
ரோட்டோரக் கடையில்
ஈக்கள் பெற்றன பாக்கியம்
ஏக்கத்தில் ஏழைக் குழந்தை...!
ஊர்வலம்
அர்த்தராத்திரியில் நடக்கின்றது
அழகியின் ஊர்வலம்
ஆகாயத்தில்.....!
மனிதர்கள்
பூவின் குணம்
கனியில் இருப்பதில்லை
பாகற்காய் மனிதர்கள்.....!!
நிதர்சனநிலை
குஞ்சினைக் காக்க
கொம்பேறி காக்கைகள்
புகுந்த வீட்டில்.....!
சினம்
சிந்திய சோற்றுப்பருக்கை
சிற்றெறும்பிடம் சிக்கியது
சினத்தில் நான்.....!
விடியல் வருமா
எப்பொழுது விடியும்
வெண்ணிலவை கேட்கிறேன்
விளையாட்டாய் சிரிக்கிறது...!
மனக்கவலை
கவலையோடு பார்க்கிறேன்
கடந்து போகும் கழுதையை...
கால்கள் கட்டப்பட்டு.....!
கொசுக்கள்
ஒருவாய் உணவுக்காக
உறங்காமல் உழைக்கின்றது
கொசுக்கள்.... !
முதுமையில் இளமை
மயிர் நரைத்தாலும்
மனம் நரைக்கவில்லை
தண்ணீரில் தவளையாய்
தாவி நீந்தும் தாத்தா....!
கொக்குகள்
வேலிக் கருவையில்
வெள்ளைப் பூக்கள்
பூத்திருக்கிறது கொக்குகளாக...!
காய்ந்த மரத்திற்கு
வெள்ளை இலைகள்
கொக்குகள்......!!
புத்தகங்கள்
என் வீட்டு புத்தகங்களை
ஏறடுத்துப் பார்க்கிறேன்....
எக்காளமிட்டு சிரிக்கின்றன
எட்டுக்கால் பூச்சிகள்......!!
குப்பைத்தொட்டி
குப்பைத்தொட்டியும்
குழந்தைப் பெற்றது
ஆடவனின் கருணையால்....!!
ஒருதலைக் காதல்
தாமரை மலர் காதல் கொண்டது
தண்ணீர் தவளையிடம்.....!
ஏக்கத்தில் மீன்கள்.....!!
ஓ...
மூடப்பட்ட அறையில்
முனகல் சத்தம்
மோகினியோ.....!!
அவன் சுயநலவாதி
கோபுர வாசிக்கு
பன்னீரில் ஆராதனை
குடிசை வாசிக்கு
கண்ணீரில ஆராதனை
அவன் சுயநலவாதி....!!
பிறந்த வீடு
புகுந்த வீட்டை விட
பிறந்த வீட்டிலே மோகமெனக்கு..
அடிக்கடி ஆஸ்பத்திரி செல்கிறேன்
என் மனம்
புரோட்டானாக நீயிருக்க
எலெக்ட்ரானாக நானிருக்கிறேன்
எப்பொழுதும் உனை சுற்றியே
என் மனம்......... !!
ஆவிகள்
குடியேற காத்திருக்கு
குட்டி சாத்தான் ஆவிகள்
கட்டி முடியா கல்லறையில்....!!
கண்ணீர் மீன்கள்
இரவு முழுதும் காத்திருக்கு
இரை தேடிவரும் கொக்குக்கு
தண்ணீரில்லை.....!
கண்ணீருடன் மீன்கள்.....!!
வியர்வை
ஆதவனின் மிகுதியால்
மலருக்கும் வியர்க்கிறதோ....
பூவெல்லாம் பனித்துளி.....!
வேடிக்கை
ஆதவனின் வருகையால்
ஆனந்தம் கொள்கிறது பனித்துளி
ஆவியாதல் தெரியாமல்......!
வியாபாரி
தலை கீழாக வளர்ந்தவனை
தலை நிமிர வைத்தவன்
வாழைப்பழ வியாபாரி.....!
தங்க நாணயங்கள்
இலையுதிர் காலம்
திக்கு முக்காடிப் போனேன்
தெருவெல்லாம் தங்க நாணயங்கள்...!!
பூங்கொடி
வளையப்பட்ட மல்லிக்கொடி
வனிதையாகிப் போகுது....
வழிநெடுகிலும் வண்ணத்துப்பூச்சி ......!!
உண்மைகள்
நீதிமன்ற படிக்கட்டுகளில்
நிம்மதியாய் உறங்குது
உண்மைகள்......!!
காளான்
கொட்டும் மழையில்
குடைப்பிடித்து காத்திருக்கு
முட்டைக் காளான்.....
எறும்பின் வருகைக்கோ.....!!
#
கானகத்தின் மரமெல்லாம்
கையேந்தி நிற்கிறது.....
கண்ணீருடன் தண்ணீர்வேண்டி.!
#
ஆறாக ஓடுகிறது
அபிஷேகப் பால் ,
ஆத்திரத்தில் ஆ (பசு).....!!
#.
பச்சை நிற புடவையை
படரவிட்டு நெய்திருக்கிறான்
விளை நிலத்தில் .....!
உழவனும் நெசவாளியே....!!
மோசடி
நாடெங்கும் நடக்குது
மூலைக்கொரு மொட்டைமரமாய்
மோசடி......!!
#
அடுப்பங்கரையில்
ஆவிகள் பறக்குது
அடக்கம் செய்யப்பட்டது இட்லி.!
#
என் பாட்டியின் பிள்ளைகள்
பரதேசியாய் நிக்குது
பனை மரங்கள்....!
#
என் பாட்டி வீட்டு
படித்தின்னை நினைவுகள்
பட்டமரமாய் நான்....!
மனைவி
என்னுயிரை கயிறாக மாற்றி
கழுத்தில் கட்டிகொண்டாள்
மனைவியெனும் மாயக்காரி...!!
விழிகள்
சதையாலான சிறையில்
சத்தமில்லாமல் கைதானேன்....
அவள் விழிகள்....!!
தண்ணீரில மீன் வாழும்
கண்ணீரிலும் மீன் வாழுமோ..
அவள் கருவிழியில்....!!
கதிரவன்
கருமேகக் கூட்டங்கள்
களவாடப்படுகின்றன
கதிரவனால்....!!
புவனா
கருநிற ஆடையை
களைத்துப் பார்கிறான் அவன்
நீலநிற நிர்வாணமாய் அவள்...!!
நிலவு
விடிய விடிய நடக்குது
வெள்ளைக்காரி கச்சேரி
வானில் நிலவு...!!
திருமணம்
அகவை முதிர்ந்த காதல்
அக்னிசுற்றி வலம் வருது
அறுபதாம் கல்யாணம்.....!!
ஆசைகள்
அவள் விழியென்ன அட்சயப்பாத்திரமோ.....!
அள்ள அள்ள குறைவதேயில்லை
ஆசைகள்.....!!
வெள்ளம்
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
அநேகம் சிக்கின...
அயிரை மீன்கள்.....!!
விதவை
சொத்தில் பங்காய்
மல்லிகைத் தோட்டம் பெற்றாள்
ஒரு விதவை...!!
நகம்
அவளது வெட்டப்பட்ட நகமானது
வீசப்பட்டது வானில்
நிலவாக....!!
மல்லிகை தோட்டம்
விண்ணில் வாழும்
விண்மீன்களை...
விளை நிலத்தில் கட்டிவைத்தேன்
மல்லிகை தோட்டம்...!!
#. பாளடைந்த நூலகத்தில்
பைபிள் ஒன்று
கண்டெடுத்தேன்...
கரையான்கள் படித்துக் கொண்டிருந்தது..?
#. வாயில் வடை
சுடுவது எப்படி
கற்றுத்தருகிறது
ஒரு காக்கை...!
Comments
Post a Comment