கிராமத்தில் ஒருநாள்
நான் உங்கள் ஆனந்த்...MRF company ல் பணிபுரிந்து கொண்டிருந்தேன்...அன்றொரு நாள் என்னுடன் பணிபுரியும் என் நண்பனின் வீட்டிற்க்கு சென்றேன்... அங்கு நான் அனுபவித்த ரசித்த இனிமையான நினைவுகளை இப்பக்கத்தில் இடுகின்றேன்.
25/01/23 மாலைப் பொழுது பணி முடிந்தவுடன் என் நண்பனும் நானும் என் வீட்டிற்க்கு வந்தோம்... மாலை 4.30 மணியளவில் என் வீட்டிலிருந்து கிளம்பி பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டு வந்தடைந்தோம்.. கூட்டம் மிதமாகவே இருந்தது... தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் ஏறி அரியலூர்க்கு இரண்டு டிக்கெட்டுகள் எடுத்தோம்..(60rs ticket) கூட்டம் அதிகமாகவே இருந்தது. பேருந்தில் ஒரு பெண்மணி இருக்க இடமில்லாமல நின்று கொண்டு வந்தாள் .. என் நண்பன் இருக்கையில் இருந்து எழுந்து அப்பெண்ணிருக்கு இடமளித்தான்.. அவன் இருக்கையில் இருந்து எழுந்ததாலும் என் இதயத்தில் உச்சியில் இருந்து கொண்டான்..
ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு அரியலூர் வந்தடைந்தோம்.. அங்கிருந்து உடையார்பாளையம் என்னும் ஊருக்கு மாலை 6.30 மணி அளவில் வந்து சேர்ந்தோம்....
அந்தி மயங்கி இருள் சூழ தொடங்கிய சமயம்..அது ஒரு அழகான கிராமத்தின் தொடக்கம்....
அரசம், வாசமடை, கிளை மூங்கில், முந்திரி, கருவேலம், வேம்பு, ஆலம் போன்ற மரங்களும் மல்லிகை, முல்லை, செம்பருத்தி, மருதாணி, அரளி முதலிய பூக்களும் ஆட்சி செய்கின்ற அழகான கிராமம் அது..!
மாலை 6.45 மணியளவில் என் நண்பனின் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம்..அவனுடைய அம்மா அப்பாவிடம் என்னை அறிமுகப் படுத்திவைத்தான். அவன் அம்மா சிக்கன் ரைஸ் வாங்கி வந்திருந்தார்கள்...அதை நான் சாப்பிட பிறகு மீதமிருந்ததை அவன் தந்தை சாப்பிட்டார் .. அளவில்லா வியப்பும் ஆனந்தமும் என் உள்ளத்தை ஆக்கிரமித்தது..
உணவு முடித்து இரவு 8.30 மணியளவில் நானும் என் நண்பனும் வெளி கிளம்பினோம்... என் நண்பன் அவன் நண்பர்களை அறிமுகப்படுத்தினார்... (தமிழ் வளவன், கல்வி) ஜாலியான பசங்க அவர்கள் இருவரும்.. நண்பர்கள் மூவரும் சேர்ந்து தம் புடிக்க சென்ற பிறகு நான் அக்கிராமத்தில் முனீஸ்வரன் கோவில் திண்ணையில் உக்காந்திருந்தேன் .. இரவு பிறந்து வெகு நேரம் ஆகியிருந்தது...ஆகாசத்தில் மிதந்து கொண்டிருந்த அவ் விண்மீன்கள் ஒருவித ரசபோதையை உண்டுபண்ணியது... போதை தெளியும் போது பொழுது நன்கு புளர்ந்திருந்தது...
கோழிகளின் கொக்கரிப்பும், சேவல்களின் கூவழும், குயில்களின் கீதமும் எனை பால பருவத்துக்கே இழுத்துச் சென்றது...(26/01/23)
மாட்டுக்கொட்டைகளும், ஆட்டுக்குட்டிகளும், சோளம் உரிக்கும் கிழவியும்,நாய்களின் இரைச்சலும், டீ ஆத்தும் அம்மாக்களும், காடு செல்லும் ஆடவர்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் ....பாதி கழிந்தாலும் மீதி வாழ்க்கை இக்கிராமத்தில் வாழ்ந்து விடுவோமா என்று எண்ணிக்கொண்டேன்...
அன்று குடியரசுதினம், காலை 7.30 மணியளவில் நானும் என் நண்பனும் வெளிகிளம்பினோம்.. அக்கிராமத்தில் கம்மாய் தாமரை இலைகளால் ஆலிங்கனம் செய்யப்பட்டிருந்தது ...அவன் படித்த பள்ளிக்கு எனை அழைத்துச் சென்றான்... சின்னசிரு குழந்தைகள்
தேசிய சின்னத்தை நெஞ்சில் தாங்கியபடி கையில் உணவு கூடையும் , தோளில் புத்தகப் பையுமாய் பறந்து வந்துகொண்டிருந்தார்கள்... எங்கள் பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.
காலை 10.30 மணியளவில் நானும் என் நண்பனும் ஒரு அழகான பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தோம்.. நான், கார்த்தி, கல்வி மூவரும் ஒரே பைக்கில் சென்று ஒரு சில நிமிடங்களில் ஜெயகொண்ட சோழபுரம் எனும் ஊரினை அடைந்தோம்.. அங்கு இன்னொரு நண்பற்களான ஆதிகேசவ , தமிழை அழைத்துக் கொண்டு சோழ நாடனை நோக்கி பயணம் போய்க்கொண்டிருந்தோம்...
வழியில் பொன்னேரி என்ற அகண்ட நதியை கண்டோம்... ஆகா... பொன்னி நதி தாய் இங்கேயும் தங்கியிருக்கிறாள்... கண்குளிர அவளை தரிசித்து விட்டு பயணத்தை தொடர்ந்தேன் ...
விண்ணை அளந்த கோபுரங்களும் , வியப்பு அளிக்கும் விக்கிரகங்களும் விருந்தளித்தது... ஆம்.. நாங்கள் வந்திருப்பது பராந்தக சக்கரவர்த்தியின் பேரனான...மாபுகளும் வேந்தன்.. கங்கை கொண்ட சோழனின் களைநயத்தாலும் பக்தியாலும் கம்பீரமாய் கட்டப்பட்ட அக்கோயில்..
கங்கைகொண்ட சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது ... தஞ்சையில் இருப்பதைபோலவே பெரிய நந்தியும், மதில் சுவரும், குடைவரை சிற்பங்களும், மண்டபங்களும் இங்கேயும் இருக்கின்றது... ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் வலிமை குன்றாமல் மின்னிக்கொண்டிருக்கிறது.... இப்பேர்ப்பட்ட மன்னனின் வீரத்தையும் ஆற்றலையும் எண்ணி எண்ணி பார்த்தேன்... முகமோ உறைந்து போயிருந்தது .. ஆனால் மனமோ வெள்ளத்தில் அகப்பட்ட தோணி போல திக்கு முக்காடிப் போனது....
நான், கார்த்தி, தமிழ், கல்வி, ஆதி எல்லாரும் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தோம்... நண்பன் தமிழ் காமெடியாக பேசிக்கொண்டு வந்தான்..குடியரசுதினம் ஆதலால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பள்ளி மாணவர்களும், பெரியோர்களும், பெண்களும், ஆடவற்களும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். ஆங்காங்கே சிறுவர்களும் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்தார்கள், காதலர்களின் கையும் ஓங்கி இருந்தது. நூற்றுக்கணக்கான புறாக் கூட்டங்கள் தஞ்சம் கொண்டிருந்தது... என் மனமும் கோபுரத்தின் உச்சியிலே தஞ்சம் கொண்டுவிட்டது...
மதியம் 2.30 மணியளவில் மாளிகைமேடு என்னும் ஊரில் உள்ள ராஜேந்திர சோழனின் புதையுண்ட அரண்மனையைக் கண்டோம்... உட்கோட்டை வழியாக மீண்டும் ஜெயங்கொண்டம் வந்து ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்தபின் மாலை 5.30 மணியளவில் என் நண்பனின் கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம்..களைப்பின் மிகுதியால் கட்டியணத்துக் கொண்டாள் நித்திரா தேவி...இரவு 8 மணியளவில் என் நண்பனின் அம்மா உணவு பரிமாறினார்கள்...சிக்கன் சாப்பாடு... உணவோடு சேர்த்து பாசத்தையும் பரிமாறினார்கள் ... போதும் என்றது மனம் உணவை அல்ல பாசத்தை....!
அவன் தந்தை கை கழுவதற்கு வெந்நீர் போட்டுத் தந்தார் பலமுறை... அன்னையும் தந்தையும் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்தேன்...
இரவின் உரையாடல்கள் முடிந்து...படுக்கையை அடைந்தது உடல் ...பெருத்த அமைதி.... சிப்பிக்குள் கைதான முத்தைப்போல்
சிறைபட்டது என் விழிகள்.(27/01/23)
கதிரவன் எழுந்தும் மனம் எழவில்லை .. மீண்டும் என் ஊருக்கு திரும்பும் நேரம் வந்ததால்...விழிகள் வலித்தாலும் வலிகளும் இனித்தது.. இனிமையான நினைவுகளோடு பிரியாவிடை கொடுத்து பிரிந்து சென்றேன் ...
அக்கிராமத்திற்கும் ஒரு பெயர் இருந்தது...நாயகனைப் பிரியாள்
ஏனோ என்னாளும் அந்நாயகனை பிரிய இயலவில்லை....!
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment