வெள்ளைபுறா
வாழ்வியல் தத்துவ கவிதைகளும்
என்னோடு உறவாடும் எண்ணற்ற சிந்தனைகளின் வெளிப்பாடும் இங்கு சிறகு விரிக்கும்.....!!
🪶. நிலவில்லா நட்சத்திரமில்லா அந்த இரவுகளில் தனிமையின் கதவுகளில் முட்டிக் கொண்டிருப்பேன்...!
🪶. வாழ்வெனும் கடலில்
துடுப்புகளற்ற ஓடங்களாய் தவிக்கின்றேன் ..
🪶. எனை எரிப்பதற்கு
விறகுகள் வேண்டாம்
மலர்கள் போதும்
மௌனமாய் சூடிக்கொள்வேன்..!
🪶. நான் இன்றும்
பாலகனாய் இருந்திருந்தால்
அந்த பூச்சிகளையே அதிகம் நேசித்திருப்பேன்...!
🪶. என் கண்ணீர் குளத்திலும்
சலசலப்பு சத்தம்..
வலிகளும் வேதனைகளும்
நீந்திக்கொண்டிருக்கின்றன...!
🪶. விழும் விதைகளெல்லாம்
விருட்சங்கள் ஆவதில்லை
விருட்சங்களாகிய விதைகள் எல்லாம் விழாமல் இருந்ததில்லை...!
🪶. இருட்டில் மறைந்துள்ளது
காக்கையோ ஆந்தையோ
யார் அறிவார்..
விடியும் வரை காத்திருப்போம்...!
🪶. வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து முடித்துவிட்டது...
அதன் சாயங்களே என்னுள் காயங்களாகி விட்டது...!
🪶. உணவிட்டு வளர்த்து
உயிர்க் கொலை செய்து
உப்பிட்டு உண்கிறான் அதை..மிருகத்திலும் மிருகம் மனிதன்...!!
🪶. அழிக்கப்பட்ட காடுகளுக்கிடையில்
ஆரவாரமாய் எழும்
ஒரு விதையாய் இருப்போம்....!
🪶. யார் அது
தருமன் விராடன்
என் தந்தையை
தெரியுமா அவர்களுக்கு...!
🪶. எண்ணுலகம் சுருங்கியதை உணர்த்தியது என் முகம்..
தூரத்தில் எருமையின் குரல்..!
🪶. வாழ்வில் தடுக்கிவிடும் கற்கள்
தாராளமாய் இருக்கும்.. கவனமோடு கடந்து வா..
தடுக்கினாலும் கவலை கொள்ளாதே
தன்னம்பிக்கையோடு
எழுந்து வா...!
🪶. மனம் மரணிக்கின்றது பலமுறை...ஏனோ உடல் ஒத்துழைப்பதில்லை..
இன்று வரை வாழ்கின்றேன் .!
🪶. தனிமையை காதலிக்காதீர்கள்
அதுவும் சுயநலவாதிதான்..
ஒரு சில காலம் உன்னோடு இருந்துவிட்டு ஊர் தாண்டி ஓடிவிடும்...!!
🪶. கிளைகள் இலைகளை துறந்ததா..இல்லை
இலைகள் கிளைகளை துறந்ததா...
எதும் புரியவில்லை எனக்கு...!
🪶. வேகமாய் செல்லவேண்டும்.. விடியப் போகிறது..
கையில் இருப்பதோ ஒரு ஓட்டைப்படகு...!
கையில் இருப்பதோ ஒரு ஓட்டைப்படகு...!
🪶. சோம்பல் முறித்து
சுகமாய் எழுவேன்..
சுவற்று கடிகாரத்துடன் உரையாடிய பின்..!
🪶. செல்லும் இடமெல்லாம் ஒருவரை காதலித்தேன்...
என்னை மட்டும் வெறுத்தேன்..!
🪶. இறக்கைகள் இல்லாவிட்டாலும்
பறவை நான்...
முடிந்தால் என்னைப் பிடிக்கப் பார்...!
🪶. பெற்ற பிள்ளையென்றால்
பூனைகூட புலியாய் மாறும்..
பகைத்துப்பார் புரியும் உனக்கு...!
🪶. சிறகடித்துப் பறந்தது
சிட்டுக்குருவியொன்று...
சிக்கிகொண்டது
சிந்திய இறகுகள்...!
🪶. என் மனச்சந்தையில்
பூக்கடைகளை நிர்மாணித்தேன்.
சாக்கடைகளும் எங்கிருந்தோ வந்துவிட்டது...!
🪶. மறுபிறவியில் நம்பிக்கை
உண்டெனக்கு..
என் மனம் பலமுறை
மரணித்துள்ளது...!
🪶. என் தாய் ஏற்றிய
தீபம் நான்..
அவள் இருக்கும்வரை
அணைய மாட்டேன்...!
🪶. மலையேரும் போதெல்லாம்
பசுமை புரட்சியில்
பங்குகொள்கிறது மனம்...!
🪶. வாழ்வெனும் வானில்
இரைதேடும் பருந்தாய் திரிகின்றேன்..
இலக்கு எதுவும் இதுவரை தென்படவில்லை.இறக்கைகள் வலிக்கும் முன் இறையை அறிய வேண்டும்...!
🪶. என் கவிதைகளை
நானே உண்கிறேன்...
உப்பும் உரப்பும்
சரி பார்ப்பதற்கு...!
🪶. கடவுள் எங்கே
என்று கேட்டேன்...
கல்லுக்குள் ஒளிந்துள்ளான்
என்றான் சிற்பி...
🪶. சிவகாமியை கவர்ந்து வந்துவிட்டேன்
சிந்தையில் வைத்து..
ஆயனர் என்ன செய்வார்...!
🪶. சோகம் தந்த இறைவன்
சுகத்தையும் தருவான் ...
யுத்தத்திற்கு தயாராகு....!
🪶. இரவின் வாசல்
கொஞ்சம் கடுமையானது தான்..
உள்ளே சென்று பார் மிகவும் இனிமையானது...!
🪶. என் கவிதைக்கு மட்டும் ஏராளமான கைகள் கண்ணில் படுவோரையெல்லாம் கட்டிக் கொள்ளும்...
🪶. என் கற்பனைகளையே நான் காதலிக்கிறேன்...
அது என்றும் என்னை
காயப்படுத்துவதில்லை...
🪶. காணும் அனைத்தையும் காதலியுங்கள்..
சில காயமானலும்
பல மருந்தாகும்..!
🪶. வலிகளும் வேதனைகளும் வரிகளாகவே வெளிப்படுகிறது
அந்த கவிஞனுக்கு...!
🪶. இன்ப துன்பத்திலும்
இகழும் புகழும் நிலையிலும்
இறைவனை மறக்காதே....! 🪶. இறைவனை தேடுவதை விட்டு விட்டு உணர முயற்சி செய்..
உண்மை விளங்கும்..!
🪶. புத்தக சுமையை
பழகிக் கொள்ளுங்கள்..
வாழ்வின் சுமை எளிதாகும்..!
🪶. ஓடிக்கொண்டே இரு
ஓடுவதை நிறுத்தி விட்டால்
ஊரார் எரித்துவிடுவர்
சொற்களால்...!
🪶. கற்சிலையும் கண்ணீர் வடிக்கிறது
கோயில் முன்பு கையேந்தும்
குழந்தையைக் கண்டு...
🪶. உன்னிடம் கையேந்துபவனுக்கு
உதவிட மறக்காதே...
கையேந்துபவன்
கடவுளாகவும் இருக்கலாம்..!
🪶. பெண்ணில்லா வீடு
கண்ணில்லா மனிதனைப் போல நடப்பது தெரியும்
நடைபாதை தெரியாது..!
Comments
Post a Comment